டெல்லியில் கோடைக்கால முகாமின் கடைசி நாளில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுடன் மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பிணைப்பு, கொண்டாட்டம் மிகுந்ததாகவும், என்றென்றும் நினைவுகூற தகுந்ததாகவும் இருக்கிறது.
வெறுமனே கல்வியை மட்டும் போதிக்கப்படும் போது ஒருவித மன அழுத்தங்களுக்கு மாணவ, மாணவிகள் ஆளாகின்றனர் என்ற நிலையில், விளையாட்டு, கலைத்திறன் போன்ற நிகழ்வுகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடச் செய்யும்போது அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர்.
தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பள்ளி மாணவிகளுடன் டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் நடனமாடுவது குறித்த காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
‘ஜும்கா பரேலி வாலா’ பாடலுக்கு மாணவிகள் மற்றும் ஆசிரியர் நடனமாடுகின்றனர். கோடைக்கால முகாமின் கடைசி நாளின் போது நிறைவு தருணத்தில் இந்த நிகழ்வு அரங்கேறியியுள்ளது. இந்த வீடியோ காண்போரை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை குறுகிய நேரத்தில் 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
வீடியோவில் இடம்பெற்றுள்ள ஆசிரியை மனு குலாடி டெல்லி அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்வியை ஆடல், பாடல் உள்ளிட்ட அம்சங்களுடன் சேர்த்து பயிற்றுவிப்பது இவரது வழக்கம். இதே பாணியிலான கற்பித்தல் முறை எதிர்பார்த்ததை விட தேர்விலும் நல்ல மதிப்பெண்களை பெற உதவுதாகவும் ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுவதாகவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் மனு குலாடி.