டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மக்கள் நெரிசல் நிறைந்த ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் பை, நெகிழிப்பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டதாகவும் நெகிழிப் பொருட்கள் எரிந்த காரணத்தால் புகை அதிக அளவில் வெளியேறியதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.
இது தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளரையும் மேலாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே அதே தொழிற்சாலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.