கிரிக்கெட் வீரர் மாரடைப்பு ட்விட்டர்
இந்தியா

தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த டெல்லி பொறியாளர்!

Prakash J

சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

மாரடைப்பு

அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், உத்தரப்பிரதேசம் நொய்டாவில் இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், மேவரிக்-11 அணிக்காக நொய்டாவைச் சேர்ந்த பொறியாளரான விகாஸ் நேகி என்பவர் களமிறங்கி விளையாடினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவர் விழுந்ததை அறிந்த வீரர்கள் ஓடிச் சென்று முதலுதவி அளித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் நேகி, நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.