டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டுமல்ல, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கும் இது முக்கியமான வெற்றிதான். ஏனெனில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து கிஷோரை நீக்கிய பின்னர் அவர் சந்தித்த முதல் தேர்தல் இதுதான். அதனால், இந்த வெற்றியின் மூலம் தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நிதிஷ் குமாருக்கு மட்டுமல்ல மறைமுகமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அவர் செய்தி சொல்லியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தில் 300 எம்பிக்கள், ஒட்டுமொத்த அமைச்சர்கள், முன்னாள் இன்னாள் முதலமைச்சர்கள் என பலரை பாஜக களமிறக்கியது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகங்களை நன்கு அறிந்தவர் பிரசாந்த் கிஷோர். பாஜக தரப்பில் அமைத்த அத்தனை வியூகங்களையும் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர் கூட்டணி தகர்த்துவிட்டது என்றே சொல்லலாம். ஒப்பந்தம் செய்த பின்னர் என்னவெல்லாம் ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கினார், அதனை ஆம் ஆத்மி எப்படி கடைபிடித்து வந்தது தொடர்பாக தற்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் சில முக்கியமான அறிவுரைகளை கொடுத்துள்ளார். முதலில் அவர் சொன்னது ‘2015-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார். அதன்பிறகுதான், தலைநகர் முழுவதும் ஆம் ஆத்மி அரசு சிசிடிவி கேமிராக்கள் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொண்டது. இலவச அதிவேக வைஃபை வசதி கொடுக்கப்படும் என அறிவித்தார். இன்னும் பல அறிவிப்புகளை வெளியிட்டது ஆம் ஆத்மி. தேர்தல் பரப்புரையின் போது நாங்கள் சொன்னதை செய்துள்ளோம் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இந்த யுக்தியை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் தேதி அறிவித்த பின்னர் சில அறிவுரைகளை கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி தலைவர்களுக்கும் கிஷோர் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலே தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
முதலில் கிஷோர் சொன்ன அட்வைஸே மோதல் போக்கை கைவிட வேண்டும் என்பதுதான். அதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது கூடவே கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதன் அடிப்படையில் தான், பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்சி தலைவர்கள் மத ரீதியான பிரசாரத்தை கையெலெடுத்த போதும், ஆம் ஆத்மி தலைவர்கள் அதனை கண்டு கொள்ளவேயில்லை. இத்தனைக்கும், பிரசார நாட்களில் மத ரீதியான வெறுப்பு பிரசாரங்கள் சார்ந்தே தலைப்புச் செய்திகள் வந்தது. ஆனால், அதனையெல்லாம் கெஜ்ரிவால் சட்டை செய்யவே இல்லை.
வளர்ச்சியின் நாயகனாக உங்களை மறுகட்டமைப்பு செய்து கொள்ளுங்கள். அதாவது, அதன் அடிப்படையிலே சிசிடிவி கேமராக்கள், இலவச பேருந்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்தார். தேர்தல் அறிவித்த பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் வீடுகள் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்தார் கெஜ்ரிவால். பிரதமர் நரேந்திர மோடியை ‘கவுண்ட்டர்’ செய்யும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். மோடியை எதிர்க்காததன் காரணமாக பாஜகவினர் பலரின் ஓட்டுக்களும் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படியோ டெல்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது என்பதில் பிரசாந்த் கிஷோருக்கும் பங்கு இருப்பதை மறுத்துவிட முடியாது. அவரது அடுத்த இலக்காக தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.