மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கைதாகியுள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.
டெல்லியின் நிதி அமைச்சராக இருந்து, தான் டெல்லிக்கு நிதிநிலை அறிக்கை தயாரித்து வருவதால், விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தார் மணீஷ் சிசோடியா. அதனை ஏற்று, தேதி ஒத்திவைக்கப்பட்டு நேற்று காலை (பிப்ரவரி 26) டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். பின்னர் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று மாலை மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதை ஏற்ற நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அவரை மார்ச் 4ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் தற்போது தனது டெல்லி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவின் ராஜினாமா கடிதத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.