இந்தியா

துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

webteam

டெல்லி துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவை சகாக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் போராட்டத்தை நிறுத்த வேண்டும், நியாய விலைக் கடைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளுக்காக 3 அமைச்சர்களுடன் சேர்ந்து கடந்த 11 ம் தேதி டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது ஆளுநர் அனில் பைஜால் கோரிக்கைகளை ஏற்கவில்லை, எனவே ஆளுநரின் அலுவலகத்தின் வரவேற்பு அறையிலேயே அமைச்சர்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து  ஆளுநர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை முதல் அவரது அமைச்சரவை சகாக்கலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சத்யேந்திரா உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசோடியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், அரசுப் பிரதிநிதியின் அலுவலகத்தில் 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. மேலும் கெஜ்ரிவாலின் இந்தத் தர்ணா போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றும் தேசிய தலைவர்கள் சிதாராம்யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல எதிர்க்கட்யினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.