இந்தியா

#MeToo விவகாரம்: எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரியா ரமணி விடுவிப்பு

#MeToo விவகாரம்: எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரியா ரமணி விடுவிப்பு

webteam

பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரியா ரமணியை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2018-ஆம் ஆண்டு ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதில் திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர் அடங்கினர்.

அந்தவரிசையில் பத்திரிகையாளரான பிரியா ரமணி, பத்திரிகையாளரும் முன்னாள் இணை அமைச்சருமான எம்.ஜே அக்பரின் கீழ் பணியாற்றியபோது, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குற்றம்சாட்டினார். அவரை தொடர்ந்து பல பெண்களும் அவருக்கு எதிரான பாலியல் புகார்களை தெரிவித்தனர். இந்தப் புகார்கள் மத்திய அமைச்சரவையிலும் எதிரொலித்தன் விளைவாக எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் பிரியாரமணி தன் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறான குற்றச்சாடுகள் தன் மீது வைக்கப்பட்டதாக கூறி பிரியாரமணிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதனைத்தொடந்து நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பியது. அதில் ஆஜரான ரமணி ஜாமீன் பெற்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ரமணி, மற்ற பெண்களுக்கு நடந்த கொடுமையை வெளியே கூற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அந்தப் பதிவை பதிவிட்டதாகவும், ஆகவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே தெரிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுப்பதால் ஒரு பெண் தண்டிக்கப்படக்கூடாது.

பெண் தனது மனக்குறையை தலைமுறை கடந்தும் கூட எந்த விதமான தளத்திலும் தெரிவிக்கலாம் எனக்கூறி பிரியா ரமணியை அந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

மேலும் பேசிய அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு, எதிராக பெண் எதிர்கொள்ளும் மனப்புழுக்கம் அவரை பல வருடங்கள் அதை பற்றி பேச இயலாமல் செய்து விடுகிறது என்பதை இந்தச் சமூக இந்த நேரத்திலாவது புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.