இந்தியா

“என் கணவரை முத்தமிடுவேன்; தடுக்க முடியுமா?” - ஊரடங்கை மீறிய தம்பதி போலீசாரிடம் வாக்குவாதம்

“என் கணவரை முத்தமிடுவேன்; தடுக்க முடியுமா?” - ஊரடங்கை மீறிய தம்பதி போலீசாரிடம் வாக்குவாதம்

webteam

டெல்லியில், ஊரடங்கை மீறிய தம்பதியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொரோனா பரவலின் எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது. அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனிடையே டெல்லியைச் சேர்ந்த பங்கஜ் தத்தா - அபா குப்தா தம்பதியினர் நேற்று மாலை ஊரடங்கை மீறி காரில் வந்துள்ளனர். அப்போது டெல்லியின் தரியகஞ்ச் என்ற இடத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தம்பதியினர் வந்த காரை சோதனை செய்தபோது அவர்கள் மாஸ்க் அணியாதது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் கேள்வி எழுப்பினர். உடனே போலீசாரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “நான் என் கணவருக்கு முத்தமிடுவேன். உங்களால் தடுக்க முடியுமா?” என அபா குப்தா போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார். மாஸ்க் அணியவில்லை என போலீசார் கேள்வி எழுப்பியபோது “என் காரை ஏன் நிறுத்தினீர்கள்? நான் என் மனைவியுடன் என் காருக்குள் இருந்தேன்” என பங்கஜ் தத்தா பதிலளிக்கிறார்.

தொடர்ந்து தம்பதியினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் அவர்கள் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஞ்கஜ் தத்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அபா குப்தாவும் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், டெல்லி காவல்துறையினர் கொரோனா விதி மீறல்களுக்காக 569 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், 2,369 பேருக்கு அபராதம் விதித்துள்ளனர். அதேபோல் 323 பேர் கைது செய்யப்பட்டனர்.