ராஷ்மிகா போலி வீடியோ, ஸ்வாதி மாலிவால் ட்விட்டர்
இந்தியா

நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ்!

நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Prakash J

நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பாக சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ’புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ எனவும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகை ராஷ்மிகாவை, நவீன தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை ராஷ்மிகா வேதனை தெரிவித்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.