கெஜ்ரிவால், என்.ஐ.ஏ. ட்விட்டர்
இந்தியா

ஜாமீன் கிடைக்குமா? அடுத்த சிக்கல்.. NIA விசாரணையை எதிர்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால்!

”முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும்” என டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.

Prakash J

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நாளை (மே 7) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தாம் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை

கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, ‘தேர்தல் நேரம் என்பதால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது பரிசீலிக்கலாம்’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. நாளை, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த ஆபத்தாக என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’உங்க வீட்டு கலவை மெஷின் சத்தம் தொந்தரவா இருக்கு’ - சச்சினுக்கு எதிரா புகார் சொன்ன நபர்! வைரல்பதிவு!

தடை செய்யப்பட்ட 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பிடம் இருந்து, அரசியல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி 16 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக இந்து கூட்டமைப்பைச் சேர்ந்த அஷூ மோங்கியா என்பவர் புகாரளித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் அவர் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புகாரின் அடிப்படையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீது பயங்கரவாத குற்றவழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த மத்திய உள்துறைச் செயலாளருக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

1993ஆம் ஆண்டு டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, சிறையிலடைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளரான தேவேந்திர பால் புலரை விடுவிப்பதற்காக கெஜ்ரிவால் நிதி பெற்றதாக புகாரில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து, அவர் டெல்லி நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டிருப்பது டெல்லி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பாஜகவின் சதி என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

NIA

இதுகுறித்து டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ”பாஜகவின் உத்தரவின் பேரில் கெஜ்ரிவாலுக்கு எதிரான மற்றொரு சதி இது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவின் தோல்வி பயம், அக்கட்சியைத் திணறச் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!