அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை ட்விட்டர்
இந்தியா

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு|அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Prakash J

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத் துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இவ்வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன்1 ஆம்தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தவிர, அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த மே 10ஆம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டார். பின்னர், அவரது பிணை நிறைவடைந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் கடந்த ஜூன் 2ஆம் தேதி திகார் சிறைக்கு திரும்பினார்.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

இதற்கிடையே அவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் (ஜூன் 19) முடிவடைந்தது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றம் அவரது வரது நீதிமன்றக் காவலை ஜூலை 3-ஆம் தேதி வரை நீடித்திருந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்

எனினும், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 20) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் நாளை (ஜூன் 21) சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

"இன்று, கலால் கொள்கை ஊழலில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ. 1 லட்சம் ஜாமீனில் ஜாமீன் வழங்கப்பட்டது... நாளை மதியம் அரவிந்த் கெஜ்ரிவால் வருவார். இது ஆம் ஆத்மி தலைவர்களுக்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று ஆம் ஆத்மி சட்டக் குழு வழக்கறிஞர் ரிஷிகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.