அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

’கைதுசெய்ய வெறும் 4 ஆவணங்கள் போதுமா’- நீதிமன்ற விசாரணையில் கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால்..நடந்தது என்ன?

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேலும் 4 நாட்கள் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Prakash J

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், சிறையில் இருந்தவாறே அரவிந்த் கெஜ்ரிவால், துறைரீதியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். கெஜ்ரிவாலின் கைதுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி இருந்த நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என எதிர்வினை ஆற்றி இருந்தது இந்திய அரசு. அதேநேரத்தில், கெஜ்ரிவால் கைதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிராக, இந்த விவகாரத்தில் அவர் பதவி விலக வேண்டும் என பாஜகவும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நான் கைது செய்யப்படுவதற்கு இந்த ஆவணங்கள் மட்டும் போதுமா? ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற இலக்கை கொண்டு அமலாக்கத்துறை செயல்படுகிறது
அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்கிடையே டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரியும் மற்றும் காவலில் வைத்து விசாரிக்கும் உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

’’கைது செய்யப்படுவதற்கு வெறும் 4 ஆவணங்கள் மட்டும் போதுமா?’’

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு ஒருவாரம் விசாரணை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவால் இன்று (மார்ச் 28) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”இவ்வழக்கு 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என அறிவிக்கவில்லை, குற்றவாளி என அறிவிப்பதற்கு என் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. ED இதுவரை 31 ஆயிரம் ஆவணங்களைச் சேகரித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. நான் 4 அறிக்கைகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறேன். அதன்படி பல்வேறு சாட்சிகளையும் அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு உள்ளேன். நான் கைது செய்யப்படுவதற்கு இந்த ஆவணங்கள் மட்டும் போதுமா? ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற இலக்கை கொண்டு அமலாக்கத்துறை செயல்படுகிறது. அமலாக்கத்துறை தன்னைக் காவலில் எடுத்து விசாரிப்பதை, தான் எதிர்க்கப் போவதில்லை. எத்தனை நாள் முடியுமோ, அத்தனை நாட்களுக்கு அவர்கள் என்னைத் தாராளமாக விசாரித்துக் கொள்ளட்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ED அனுப்பிய சம்மனை நிராகரித்த மஹுவா மொய்தரா.. ‘என்ன நடக்கும் தெரியுமா?’.. மிரட்டும் பாஜக!

”அதிகாரிகள் கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரியாகப் பதிலளிக்கவில்லை!”

இதற்கு அமலாக்கத்துறை, "மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹவாலா பணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கிடைக்கப் பெற்று அதை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தல் பணிக்காக பயன்படுத்தினார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்.

மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக பதில் அளிப்பதில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் நிதிசார்ந்த பரிவர்த்தனை தொடர்பான கேள்விகளுக்குக்கூட அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை. எனவே மேலும் 7 நாட்கள் விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.

கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக் காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், கெஜ்ரிவால் அடுத்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் நீட்டிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை சார்பில் 7 நாள் அவகாசம் கேட்டநிலையில், 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை 11:30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே கைது நடவடிக்கை

சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்கில், சிபிஐ 31,000 பக்கங்கள், ED 25,000 பங்கங்களில் என்மீதான குற்றச்சாட்டை தாக்கல் செய்திருக்கின்றன. இதுவரை எந்த நீதிமன்றமும் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை.

வெறுமனே 4 பேர் என்னைப் பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே என்னைக் கைது செய்திருக்கிறது.

இருப்பினும் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். வெறுமனே 4 பேர் என்னைப் பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே என்னைக் கைது செய்திருக்கிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் பாடம் புகட்டுவார்கள். மதுபானக் கொள்கை வழக்கில் என்னை வேண்டுமென்ற அமலாக்கத்துறை சிக்க வைத்திருக்கிறது

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு சாட்சியாக மாறிய சரத்ரெட்டி எனது பெயரை சொல்லியுள்ளார் ஆனால் இதே சரத் ரெட்டி தான் பாரதிய ஜனதா கட்சிக்கு 55 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். அதுவும் அவர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!

பதவி நீக்கக் கோரி வழக்கு: மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய பொதுநல மனு, இன்று (மார்ச் 28) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை தள்ளுபடி செய்துள்ளது. சுர்ஜித் சிங் யாதவ் என்ற நபர் உயர்நீதிமன்றத்தில் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதால், சட்டம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகள் தடைபடுவதோடு, டெல்லியில் அரசியலமைப்பு அமைப்பு சீர்குலைந்துவிடும் அபாயமும் உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ’அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடிக்க முடியாது எனக் கூறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக்கூறி மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவால் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை. முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது" - மத்திய அரசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!