சில்லரை காசுகளை விழுங்கிய நபர் ட்விட்டர்
இந்தியா

டெல்லி | ‘ஊட்டச்சத்து கிடைக்கும்’ - என 39 சில்லரை காசுகள், 37 காந்தங்களை விழுங்கிய பாடிபில்டர்!

மது உடலுக்கு எல்லாவித சத்துக்களும் தேவைதான். சில சத்துக்கள் குறையும் போது அதை ஈடுசெய்வதற்காக மருத்துவர்கள் மாத்திரைகள் அல்லது டானிக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள்.

Jayashree A

இன்றைய இந்தியர்கள், குறிப்பாக பெண்களின் தலையாய பிரச்னையாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு. நம் எல்லோரின் உடலுக்கும் எல்லாவித சத்துக்களும் தேவை. சில சத்துக்கள் நம் உடலில் குறையும் போது அதை ஈடுசெய்வதற்காக மருத்துவர்கள் மாத்திரைகள் அல்லது டானிக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். அந்த சத்து மாத்திரைகள் / டானிக்கை கூட சுயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்துவர் மருத்துவர்கள்.

ஆனால் இங்கு ஒருவர் துத்தநாகம் (zinc) சாப்பிட்டால் உடலுக்கு நல்லது, தசை வளர்ச்சி அதிகரிக்கும், பாடிபில்டிங்கிற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து சில்லரைக்காசுகளை விழுங்கி இருக்கிறார். கூடவே காந்தங்களையும் விழுங்கி இருக்கிறார் அந்நபர்.

சில்லரைக்காசுகளை விழுங்கிய நபரின் எக்ஸ்-ரே

டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனைக்கு கடந்தவாரம் 26 வயது இளைஞரொருவர், தீவிர வயிற்றுவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரண்டு போய்விட்டனர். காரணம் அவரின் குடல் முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில்லரை காசுகளும் காந்தங்களும் இருந்துள்ளன.

மருத்துவர்கள் இதுபற்றி விசாரிக்கையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், துத்தநாகம் உடலில் சேர்ந்தால் நல்லது என்று நினைத்ததனால் சில்லரை காசுகளையும் காந்தந்தகளையும் முழுங்கியதாகவும் தெரியவந்துள்ளது. அதேநேரம், அவர் ஒரு பாடிபில்டர் என்றும் சொல்லப்படுகிறது. தசை வளர்ச்சிக்கு உடலுக்கு துத்தநாகம் தேவை என்பதால், அவர் இவ்வாறு செய்துள்ளதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குடலில் இருந்து அகற்றப்பட்ட காசுகள்

தொடர்ந்து தீவிர சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழு, நோயாளியின் வயிற்றிலிருந்து 39 சில்லரை காசுகளையும் 37 காந்தங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்பியதாக மருத்துவர்கள் கூறினர்.