தலைநகர் டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதுகுறித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, “டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காற்றும், நதியும் மாசடைந்துவிட்டது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட டெல்லி முதல்வர் அதிஷி, “பாஜக அரசின் மோசமான செயல்பாடே யமுனை நதி மாசு அடைந்ததற்கு காரணம். ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் யமுனை நதியில் விடுகின்றனர். இதனால் நீரில் அமோனியா அளவு அதிகமாக இருப்பதால் டெல்லியில் உள்ள நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யமுனையில் அதிகரித்து வரும் மாசு அளவு மற்றும் டெல்லியில் மோசமான காற்றின் தரம் ஆகிய இரண்டுக்கும் பாஜகதான் காரணம். பாஜக டெல்லியை வெறுக்கிறது என்பதும் டெல்லியை தாக்க ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை பயன்படுத்துகிறது என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது” எனப் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முங்கி குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் வீரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக வீரேந்தர், இந்து பண்டிகைகளுக்கு ஆற்றில் மூழ்கி குளிக்கும் வழிபாடு முறைகளை இந்துக்கள் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் யமுனையை தூய்மை செய்ய தவறிய டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறி அழுக்கு யமுனையில் முங்கி குளித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசக் கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.