அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இப்போதே தேசிய கட்சிகள் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவும் அதிரடியில் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களையும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு பாஜகவும் அமைச்சரவை முதல் மாநிலத் தலைவர்கள் வரை மாற்றம் செய்யும் எனப் பேச்சு எழுந்தது.
அதன்படி, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று புதிய மாநில தலைவர்களை நியமித்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில்,
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும்,
ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கிஷண் ரெட்டி தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட இருப்பதால், அவர் வகித்த துறைக்கு வேறு அமைச்சர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.