திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில், ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக 6 லட்சம் கொடுத்து ஆள் வைத்து கணவனை மனைவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு பட்டறை உரிமையாளராக தொழில் செய்து வருபவர் மொய்னுதீன் குரேஷி. இவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவிக்கு 40 வயதாகும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் 27 வயதேயான சோயப் என்பவருடன் ஜீபாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பழகியதில் ஜீபா சோயப்பை காதலிக்க துவங்கியுள்ளார்.
சோயப்பும் காதலை ஏற்கனவே இருவரும் திருமணம் செய்து வாழ முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதற்கு கணவர் குரேஷி இடையூறாக இருப்பார் என்று கூறி அவரை கொலை செய்யுமாறு சோயப்பிடம் ஜீபா கூறியுள்ளார். தன்னால் கொலை செய்ய இயலாது என காதலன் சோயப் மறுத்துள்ளார். யாரிடமாவது பணம் கொடுத்து குரேஷியை கொலை செய்யலாம் என சோயப் கூற அதை ஜீபா ஏற்றுள்ளார்.
இதையடுத்து வினித் கோஸ்வாமி என்பவரிடம் ரூ. 6 லட்சத்தை கொடுத்து குரேஷியை கொலை செய்யுமாறு சோயப் மற்றும் ஜீபா இருவரும் கூறியுள்ளனர். மே 17 அன்று இரவு 10 மணியளவில் தர்யாகஞ்ச் பகுதியில் குரேஷியை சுட்டுக் கொலை செய்துவிட்டு வினித் கோஸ்வாமி பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை சரிபார்த்தனர்.
100 க்கும் மேற்பட்டவர்களில் விசாரணை நடத்தியதில் மனைவியே ஆள் வைத்து கணவனை கொலை செய்த சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது. மனைவி ஜீபா குரேஷி, அவரது காதலர் சோயப், மற்றும் கொலையாளி வினித் கோஸ்வாமி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கணவன் குரேஷி மது அருந்துவதாகவும், பட்டம் பறக்க விடுவதில் எப்போதும் நேரத்தை செலவிட்டதாகவும் மனைவி ஜீபா கூறியுள்ளார். மேலும் காதலரான சோயிப் மீரட்டை சேர்ந்த தொழிலதிபர் என்பதும், கொலையாளியான வினித் கோஸ்வாமி மீது உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.