இந்தியா

நிர்பயா வழக்கு: கடைசி ஆசையை தெரிவிக்க மறுக்கும் குற்றவாளிகள்?

நிர்பயா வழக்கு: கடைசி ஆசையை தெரிவிக்க மறுக்கும் குற்றவாளிகள்?

webteam

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தங்களின் கடைசி விருப்பத்தை சொல்ல மறுப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த 22-ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தூக்கு மேடைக்கு அருகில் இருக்கும் 4-ம் எண் சிறைக்கு நால்வரும் மாற்றப்பட்டு அங்கே தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்கிடும் தேதி நெருங்குவதால், தூக்கு கைதிகளின் கடைசி ஆசை என்ன? என்று கேட்டு அவர்களுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் அவர்களின் சொத்துகளை அவர்களது குடும்பத்தினருக்கு மாற்ற தயாராக இல்லை என சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளின் கடைசி ஆசைகள் குறித்து சிறை அதிகாரிகள் அவர்களிடம் கேட்டுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினரை கடைசியாக சந்திப்பது மற்றும் அவர்களின் சொத்துகளை ஒப்படைப்பது பற்றியும் கேட்டுள்ளனர். இந்த கேள்விகளுக்கு குற்றவாளிகள் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மரண தண்டனை குற்றவாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினரை கடைசி நேரத்தில் சந்திக்க சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் குற்றவாளிகள் தங்கள் சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்கப்படும்.

இந்த வழக்கில், பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நேரம் இருப்பதால் குற்றவாளிகள் தங்களுக்கு இன்னும் கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.