இந்தியா

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு-குற்றப்பத்திரிக்கையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இல்லை!

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு-குற்றப்பத்திரிக்கையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இல்லை!

webteam

டெல்லியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை.

தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் கடுமையான முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலைய ஆளுநருக்கு அக்கட்சி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் துணைநிலை ஆளுநரும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆதிமி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதுடன், அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்னிட்டு பல இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் பழிவாங்கும் நடவடிக்கையுடன் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக அந்த நடவடிக்கைகளை சாடியிருந்தார்.

இதற்கிடையில் சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ள முதல் குற்ற பத்திரிக்கையில், மணிஷ் சிசோடியாவிற்கு நெருக்கமானவராக அறியப்படும் விஜய் நாயர் உள்ளிட்ட ஏழு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மனிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து கருத்து கூறியுள்ள சிசோடியா, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்காக பாஜக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கூற வேண்டும் என கூறியுள்ளார். தற்பொழுது டெல்லி மாநகராட்சி தேர்தல்கள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.