இந்தியா

கொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது!

webteam

டெல்லியில் கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது செய்யப்பட்டார். அவர் மீதும் அவர் மகன்கள் மீதும் 113 வழக்குகள் பதிவாகி யுள்ளன.

டெல்லியில் உள்ள சாந்தி விஹார் காட்டுப்பகுதியில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அழுகிய நிலையில் 21 வயது மிராஜ் என்ற வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது இதற்கு பின்னால் இருந்தது தனது ’காட்மதர்’தான் என்று சொல்ல, அவரை வலை வீசி தேடியது போலீஸ். முன்னிபேகம் என்பவரின் மகளை காதலித்தாராம் மிராஜ். அதற்காக பாசிரன் என்பவரிடம் பணம் கொடுத்து கொல்லச் சொல்லியிருக்கிறார் பேகம். இதையடுத்து தனது மகன்களுடன் அவரை கொன்று புதைத்திருக்கிறார் பாசிரன்.
 
கடந்த செப்டம்பர் மாதம் எஸ்கேப் ஆன பாசிரனை, கடந்த வெள்ளிக்கிழமை பொறி வைத்து பிடித்திருக்கிறார்கள். விசாரணையில் அந்தக் கொலையை செய்தது தங்கள் டீம் தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் பாசிரன். 

யார் இந்த பாசிரன்?

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் பாசிரன் (62). 40 வருடத்துக்கு முன் ராஜஸ்தானை சேர்ந்த மால்கான் சிங் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின் 80-களில் டெல்லிக்கு குடிபெயர்ந்தார்கள். முதலில் குடிசை பகுதியில் வசித்து வந்த இவர்கள் பிறகு சங்கம் விஹார் பகுதிக்கு மாறினார்கள். வசதியான வாழ்க்கைக்கு வழியில்லாததால், கள்ளச்சாராய தொழில் இறங்கினார் பாசிரன். இவருக்கு மொத் தம் 8 மகன்கள். 90-களில் கள்ளச்சாராய தொழிலில் கொடிகட்டிப் பறந்த அவருக்கு கிரிமினல்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தனது மெகா குடும் பத்தைப் பயன்படுத்தி, கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது, கூலிக்கு கொலை செய்வது என்று கடந்த இருபது வருடங்களாக கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் மீது மொத்தம் 113 வழக்குகள் உள்ளன. 


பாசிரன் பற்றி போலீஸ் சொல்லும் கதைகள் திடுக்கிட வைக்கின்றன. சின்ன வயதிலேயே பணத்துக்காக கள்ளச்சாரய தொழிலில் இறங்கிய இந்த காட்மதர் கிரிமினல்களோடு  கூட்டணி அமைத்து அரசு போர்வெல்லை தனது கன்ட்ரோலில் எடுத்து, திருட்டுத்தனமாக தண் ணீர் சப்ளை யில் இறங்கினார். பணம் குவிந்தது. ஏகப்பட்ட கிரிமினல் தொடர்பும் கிடைத்தது. அதை வைத்து தனது மகன்களையும் கொலை, கொள்ளை, கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார். எப்படி கொலை செய்ய வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும் என்று மகன்களுக்கு கிளாஸ் எடுப்பாராம் பாசிரன். இவர்கள் மீது புகார் மேல் புகார் போக, போலீஸ் அடிக்கடி இவர்களைத் தேடத் தொடங்கியது. பின்னர் குடும்பம் தனித்தனியாக பிரிந்திருக்கிறது. 

சங்கம் விஹாரில் இவர்களுக்கு ஏகப்பட்ட சொத்து. எல்லாம் சட்டத்தை மீறி பறித்தவையாம். அனைத்தும் கோர்ட் உத்தரவுபடி சீல் வைக்கப் பட்டிருக்கிறது. அதை மீட்பதற்காக வக்கீல்களை ரகசியமாக சந்தித்து வந்திருக்கிறார் பாசிரன். இதை தெரிந்து கொண்ட போலீசார் அவருக்கு உதவுவது போல நடித்து சாந்தி விஹாருக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

பாசிரன் வாயைத் திறந்தால் இன்னும் பல திடுக் தகவல்கள் வெளியே வரலாம் என்கிறார்கள் போலீசார்.