இந்தியா

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தீபக் டினு சிறையில் இருந்து தப்பியோட்டம்!

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தீபக் டினு சிறையில் இருந்து தப்பியோட்டம்!

ச. முத்துகிருஷ்ணன்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் டினு காவல்துறை பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மே 29 அன்று தனது நண்பர் மற்றும் உறவினருடன் ஜீப்பில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் தீபக் டினு. கொலையில் தொடர்புடைய 15 பேரில் இவரும் ஒருவர் . இவரை வாரண்டின் பேரில் டெல்லி போலீசார் பஞ்சாப் மான்சா மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) பணியாளர் ஒருவர் அவரை இரவு 11 மணியளவில் கபுர்தலா சிறையில் இருந்து மான்சாவுக்கு தனது தனி வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) பணியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பேசிய பதிண்டா ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகவிந்தர் சிங் சீனா, “தீபக் டினுவை பிடிப்பதற்கான அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவரை பிடிப்போம்” என்று தெரிவித்தார்.