அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது சூதாட்டப் புகார் எழுந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சின் காரணமாக பஞ்சாப் தோல்வியடைந்தது. எனினும் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு பகல் 2 மணியளவில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாகிராம் பதவி ஒன்றை வெளியிட்டார். அதில், ஹெல்மட் அணிவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, நாங்கள் தயார் என தெரிவித்து தானும் களமிறங்க உள்ளேன் என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார். இதுதான் தற்போது பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் விதிமுறைப்படி, ஒரு வீரர் ஆட்டம் தொடர்பாகவோ, ஆடும் 11 வீரர்கள் குறித்தோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது. ஆடும் 11 பேர் கொண்ட அணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதன் மூலம், சூதாட்டகாரர்களுக்கும், தரகர்களுக்கும் சிக்னல் கொடுப்பது போன்றதாகும். இதனால் தீபக் ஹூடாவுக்கும் சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? சூதாட்ட தரகர்களுக்கு மறைமுகமாக தீபக் ஹூடா சமிக்ஞை கொடுத்தாரா என்பது குறித்து ஐபிஎல் சூதாட்ட தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இதற்கு விளக்கம் அளிக்க தீபக் ஹூடா நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர். விதிமுறைப்படி தீபக் ஹூடா தான் அணியில் இருக்கிறேன் என மறைமுகமாக அறிவித்தது தவறு. இதனால், இவருக்குக் குறைந்த பட்ச தண்டனையாவது கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.