ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக, மனிதர்களுடன் பயணிக்கும் நீர்மூழ்கி ஆய்வுக் கலமான சமுத்ரயானை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
கடலுக்கு அடியில் மனிதர்களுடன், 6000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நீர் மூழ்கி கலன் ஒன்றை என்.ஐ.ஓ.டி., எனும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளது. அதற்கு, சமுத்ரயான் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் துவக்க நாள் விழா சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள நிறுவன வளாகத்தில் நேற்று டந்தது.
இவ்விழாவில், மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று சமுத்ரயானை அறிமுகப்படுத்தி பேசியபோது, “இந்த ஆய்வுக்கலம் கடல் ஆராய்ச்சியின் ஒரு மைல்கல். மனிதர்களுடன் கடலுக்கு அடியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தக் கலன் வாயிலாக ஆழ்கடலில், 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள், கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். இது மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.
மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலமான, ‘மத்சியா- 6000’ஐ வடிவமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவடைந்து, இஸ்ரோ, சென்னை, ஐ.ஐ.டி., டி.ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த கலத்தின் செயல்பாடு தொடங்கி உள்ளது. அடுத்து ஆண்டு இறுதியில், மனிதருடன் கூடிய இந்த நீர்மூழ்கி கலன், 500 மீட்டர் வரையிலான ஆழமற்ற பகுதியில் கடலடி ஆராய்ச்சி ஒத்திகையை மேற்கொள்ள உள்ளது.
ஆழ்கடல் நீர்மூழ்கி மற்றொரு கலனான, ‘மத்சியா-6000’ எனப்படும் ஆழ்கடல் நீர்மூழ்கி கலன், 2024ம் ஆண்டு மத்தியில் ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும். கடலடியியல் உயர் பகுப்பாய்வு, உயிரி – பன்முக மதிப்பீடு, புவி-அறிவியல் கூர்நோக்கு, தேடுதல் பணிகள் மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு போன்ற கடலியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இது போன்று நீருக்கு அடியில் இயங்கக் கூடிய கலங்கள் மிக அவசியம்” என அவர் பேசினார்.
நீர்மூழ்கி கலத்தின் செயல்பாடுகள் குறித்து கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் தரப்பில் கூறியதாவது: இந்த நீர்மூழ்கி கலன், 2.1 மீட்டர் விட்டம் கொண்டது. இதில் மூன்று பேர் பயணிக்கலாம். தொடர்ந்து, 12 மணிநேரம் வரை இயங்கும் திறன் கொண்டது. அவசர காலத்தில், 96 மணிநேரம் வரை உதவி அளிக்கக்கூடியது.
மனிதருடன் கூடிய நீர்மூழ்கி சாதனத்தில், பாதுகாப்பான துணைக் கலங்கள் உள்ளன. குறைந்த அடர்த்தி கொண்ட மிதவை கலன் கொண்டது. தொலைத் தொடர்பு கருவிகள், மீட்பு சாதனங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்நிகழ்ச்சியல், என்.ஐ.ஓ.டி.,யின் இயக்குனர் ராம்தாஸ் வரவேற்றார். புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன், தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராமமூர்த்தி, என்.ஐ.ஓ.டி., விஞ்ஞானி பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.