இந்தியா

தூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே !

தூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே !

webteam

தமிழில் அருமையான பழமொழி உண்டு - மனமிருந்தால் மார்க்கமுண்டு - ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என எண்ணி, அதனை மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால், அதற்கான வழி பிறக்கும். சுதாவின் முயற்சியும் சாதனையும் அதுதான். சுதாவின் கதை சற்று பழையது ஆனால் ஞாபகப்படுத்த வேண்டியது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் தனது ட்விட்டரில் சுதா குறித்து பதிவிட, அவரை சமூக வலைத்தளம் மீண்டும் அன்போடு நினைவு கூறுகிறது. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குட்டம்புழா பகுதியில் வன அலுவலராக கடந்த 2006-ல் பணியில் சேர்ந்தார் சுதா. பழங்குடியின மக்களில் ஒருவர். மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றிய அவருக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. பாராட்டுக்கு ஏங்கும் மனது, பாராட்டு கிடைத்ததும் துள்ளி குதித்து செயலாற்றும் என்பார்கள். சுதாவும் அப்படித்தான். 2016-ல் கேரள அரசு சார்பில் திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றி, கழிப்பிட வசதிகளை உருவாக்க கொள்கை வகுத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த திட்டங்கள் பழங்குடியின மக்கள் வரை செல்ல வாய்ப்புகள் குறைவே. 

திட்டம் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த சுதா, தனது மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். குட்டம்புழா மலைக்கிராம மக்களுக்கு கழிவறை கட்ட பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒப்பந்ததாரரும் முன்வரவில்லை. காரணம் என்ன பார்த்தால் சாலையே இல்லாத மலைக் கிராமத்துக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதில் இருந்த சிக்கல். நடப்பதற்கே பாதை இல்லாத காட்டில் எப்படி கட்டுமானம் மேற்கொள்வது, தொழிலாளர்கள் யார் வருவார் என பல கேள்விகள் இருந்தன.

எண்ணங்கள் சுதாவை பிசைந்து கொண்டிருக்க, கட்டுமான தொழில் தெரிந்த பழங்குடியின மக்களை கண்டுபிடித்தார். எர்ணாகுளம் சென்று தன்னார்வலர்கள் பலரை சந்தித்தார். வேலைக்கு போதுமான ஆட்கள் கிடைத்தார்கள். ஆனால் பொருட்கள் ? மலையின் வரம் நதிகள். அதன் பாதையை பரிசோதித்தார் சுதா. ஆட்சியர் உதவினார். வழி பிறந்தது. கிராமங்களின் அருகே உள்ள நதிக்கரை வரை படகுகளில் கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சில நேரங்களில் தன்னார்வலர்களும் , பழங்குடியின மக்களும் அதிக தூரம் பொருட்களை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது. 

சுதவைன் விடாப்பிடியும் மனதில் கொண்ட உறுதியும் சரியாக 3 மாதத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தமாக 497 கழிவறைகள் கட்ட உதவின. வனத்துறையில் வேலை செய்யும் சுதாவின் இரண்டு மகன்களும் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்போது குட்டம்புழா மலைக்கிராமம் திறந்தவெளி கழிப்பிடமில்லா இடமாக உள்ளது. மக்கள் சுதாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர். இவரைப் பாராட்டும் வகையிலேயே லட்சுமனண் தனது ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.