இந்தியா

3 வேளாண் சட்டங்கள்பற்றி விவாதம்: டிச.23-ல் கூடுகிறது கேரள சட்டசபையின் சிறப்பு அமர்வு

3 வேளாண் சட்டங்கள்பற்றி விவாதம்: டிச.23-ல் கூடுகிறது கேரள சட்டசபையின் சிறப்பு அமர்வு

Veeramani

விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்படும் வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு டிசம்பர் 23, புதன்கிழமை கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த சிறப்பு அமர்வு நாடு முழுவதும் விவசாயிகளின் சீற்றத்திற்கு காரணமான மூன்று வேளாண் மசோதாக்களைப் பற்றி விவாதிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று தகவல்கள் கசிந்தாலும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக கேரள அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (2019) மத்திய அரசு நிறைவேற்றியபோது, அதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலங்களில் கேரள சட்டசபை முதன்மையானது.  நாட்டில் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் உணவுப் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் முன்னதாக தெரிவித்திருந்தார்.

"இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயத்தின் ஒவ்வொரு கட்டமும், விதைகளை வாங்குவது முதல் விளைபொருட்களை விற்பனை செய்வது வரை   ருநிறுவன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்று அவர் கூறினார். பண்ணை மசோதாக்களுக்கு எதிரான சட்டரீதியான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஏற்கெனவே முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.