jio, airtel, bsnl pt web
இந்தியா

கடனில் தத்தளிக்கும் AIRTEL, JIO, VI... மீண்டு வரும் BSNL.. ஆனாலும் சேவையில் சிக்கல்.. என்ன காரணம்?

கடும் நஷ்டத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். மீண்டு வருவது எப்படி? பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நடப்பது என்ன? தெரிந்துகொள்ளலாம்.

PT WEB

செய்தியாளர் கௌசல்யா

மீண்டு வரும் பி.எஸ்.என்.எல்

இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறையை தனியார் முழுவதுமாக ஆக்கிரமித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்த சூழலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்பான புள்ளிவிவரங்கள், அந்நிறுவனம் புத்துயிர் பெற்றிருப்பதை காட்டுகிறது. கடும் நஷ்டத்தில் இருந்த பி. எஸ்.என்.எல். மீண்டு வருவது எப்படி? பி. எஸ்.என்.எல் நிறுவனத்தில் நடப்பது என்ன? தெரிந்துகொள்ளலாம்.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லின் கடன் பாதியாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் 40,400 கோடி ரூபாயிலிருந்து 23,297 கோடி ரூபாயாக குறைந்திருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார். மற்ற தனியார் நிறுவனங்களை விட பி.எஸ்.என்.எல்.க்கு கடன் குறைவாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் கடன்கள்

தொலைத்தொடர்புத்துறையில் பெருமளவு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 52,740 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு 1,25,983 கோடி ரூபாயும், வோடோஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு 2,07,885 கோடி ரூபாயும் கடன் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக கடந்த 2020ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டது. அதில், கணிசமான தொகை வழங்கப்பட்டதால் 88 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். 1,20,000 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், சம்பளம், போக்குவரத்து படி உள்ளிட்டவைகள் பாதியாக குறைந்ததும் கடன் குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறுகிறார் NFTE BSNL தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் மதிவாணன். விருப்ப ஓய்வு வழங்கப்பட்டதற்குப் பிறகு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் விரைவாக சேவை வழங்குவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

நஷ்ட்டத்தில் இருந்து மீண்டு வருகிறோம்..

மதிவாணன் கூறுகையில், “2009 ஆம் ஆண்டில் இருந்து நஷ்டத்தில்தான் இருந்தோம். முதன்முறையாக 2024 - 2025 ஆம் ஆண்டுகளில் லாபத்தை எட்டக்கூடிய சூழல் வரும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக சென்ற நிதியாண்டிலேயே வரி கட்டுவதற்கு முன் எங்களுக்கு லாபம்தான் இருந்தது. வரி கட்டிய பிறகுதான் 2000 கோடி ரூபாய் நஷ்டம் வந்தது. ஒரு காலத்தில் 10 ஆயிரம் கோடியெல்லாம் நஷ்டத்தில் இருந்தோம். அதை படிப்படியாக குறைத்துள்ளோம். பிஎஸ்என்எல்லில் நிரந்தர பணிகளை செய்வதற்கே, ஒப்பந்த அடிப்படையிலான தனியார் காண்ட்ராக்டர்களுக்கு ஒப்படைக்கின்றனர். அதனால், வேலையின் தரம் குறைகிறது” என தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி. என்.எல். நிறுவனங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக 2019ஆம் ஆண்டு 69 ஆயிரம் கோடி ரூபாயும், 2022ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக மத்திய இணையமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார். 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெற ஒப்புதல் அளித்ததாகவும் கூறியிருந்தார். அதேநேரம், தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 531 இடங்களை மத்திய அரசு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊழியர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

வேகமாக நடைபெறும் 4ஜி சேவை வழங்கும் பணி

இவைகள் ஒருபுறம் என்றால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் 25 சதவிகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் 4 வாரங்களில் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்துடன் இணைந்து 4ஜி சேவையை வழங்கும் பணி மிகவேகமாக நடைபெற்று வருகிறது. தனியாருடன் ஒப்பிடும்போது கட்டணம் குறைவாக உள்ள பி.எஸ்.என்.எல். குறித்த சாதகமான செய்திகள் அந்நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெறுவதையே காட்டுகிறது.