Snake Bite Snake Bite
இந்தியா

புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்

புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்

Madhalai Aron

கிராமங்கள், நகரங்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் வாழ்ந்து வருபவை பாம்புகள். பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம். சமீபகாலமாகப் பாம்பு கடித்ததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக் கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், பாம்புக் கடியால் ஆண்டுக்கு 1,38,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 320 பாம்பு வகைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம், சுருட்டை விரியன், சட்டி தலையன் போன்ற பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. சாரைப்பாம்பு உட்பட 282 வகை விஷமற்ற பாம்புகளும் இந்தியாவில் உள்ளன.

சமீபத்தில், தேசிய சுகாதார நிறுவனம் (NHP) தெரிவித்துள்ள தரவுகளின் படி, 2020ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் பாம்பு கடித்து அதிகம் பேர் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது. இங்கு சுமார் 132 பேர் 2020ல் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 78 பேர் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ஒடிசாவில் 75 பேரும், நான்காவது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 54 பேரும் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 2017ம் ஆண்டு 38 பேரும், 2018ம் ஆண்டு 50 பேரும், 2019ம் ஆண்டு 70 பேரும் 2020ம் ஆண்டு 78 பேரும் என 2017 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 236 பேர் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் பாம்புக் கடியால் அதிக பேர் உயிரிழந்த மாவட்டங்களில் கோயம்புத்தூர் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சேலம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் 1,598 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு அதில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், தஞ்சாவூரில் 3,354 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு அதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் 2,539 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் 306-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.

பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகளை விட, அதனால் ஏற்படும் பயத்தினாலேயே பலர் உயிரிழப்பதால், பாம்புகள் குறித்து அனைவரும் ஓரளவேனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாம்புகளில் விஷம் உள்ளவை எவை, விஷம் இல்லாதவை எவை, பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமானது.

பாம்புகளுக்கு 90 டிகிரி பார்வை கோணம் உண்டு. ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றலும் கொண்டது. நாம் அதை மிதித்தாலோ அல்லது துன்புறுத்த முயன்றாலோ தற்காப்புக்காக அவை கடிக்கின்றன. அதே போல் கடிக்கும் பாம்புகளில் எல்லாமே விஷம் உடையவை அல்ல. ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை என்பதே இங்கே யதார்த்தம். பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்பு வைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே தவறான முதலுதவிகள். பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்துச் செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்பு கடித்தால் முதலுதவி என்னென்ன?

பாம்பு கடித்தவரை நடக்க விடக்கூடாது. அமைதியாக படுக்க வைக்க வேண்டும்.

கடிபட்டவர் பதற்றமடையக் கூடாது. பதற்றமடைந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும்.

கடித்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை இறுக்கமாகக் கட்டாமல் இடைவெளி விட்டுக் கட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக மருத்துவமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’ (Anti Snake Venom - ASV) மருந்து தரப்படுகிறது.