இந்தியா

கொரோனாவைவிட ஆபத்தாகும் ஊரடங்கு உத்தரவு உயிரிழப்புகள்?: கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்.!

கொரோனாவைவிட ஆபத்தாகும் ஊரடங்கு உத்தரவு உயிரிழப்புகள்?: கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்.!

webteam

ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல கி.மீ தூரம் சொந்த ஊர்களுக்கு நடந்தே சொல்லும்போது அதில் சிலர் மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் வருபவர்கள் மீது போலீசார் தடியடியும் சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஏழை தொழிலாளர்கள் நடந்தே வீடு சென்று சேருவோம் என சொந்த ஊருக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலர் பல்வேறு காரணங்களால் தங்கள் உயிரையும் இழந்து வருகின்றனர். இது கொரோனாவை காட்டிலும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லியில் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் 39 வயது மதிக்கத்தக்க நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில் சுமார் 200 கி.மீ தூரம் நடந்து ஆக்ராவில் இறந்ததாக கூறப்படுகிறது. ரன்வீர் சிங் என அடையாளம் காணப்பட்ட இவர், மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம், பேட்ஃப்ரா கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஹைதராபாத்தில் ஏழு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 18 மாத குழந்தையுடன், ஊரடங்கு உத்தரவையொட்டி சொந்த வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிரா - குஜராத் எல்லையில் உள்ள பிலாட் என்ற இடத்தில் இருந்து வசாய் என்ற பகுதிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த நான்கு பேர் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மும்பை - குஜராத் நெடுஞ்சாலையில் விராரி என்ற பகுதியில் லாரி மோதி உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

144 தடை உத்தரவால் எந்த வாகனமும் கிடைக்காததால் 62 வயதான நபர் ஒருவர் சூரத்தில் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் பால் வாங்க சென்ற 32 வயது நபர் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கேரளாவில் ஊரடங்கு உத்தரவால் சாலை முடக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் தேனியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வழக்கமான சாலைகள் பூட்டப்பட்டதால் காட்டுப் பாதையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் 4 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.