இந்தியா

மே.வங்கம்: ஆரம்ப பள்ளி மதிய உணவில் கிடந்த எலி, பல்லி - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மே.வங்கம்: ஆரம்ப பள்ளி மதிய உணவில் கிடந்த எலி, பல்லி - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Sinekadhara

மேற்கு வங்கத்தில் ஒரு ஆரம்ப பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பல்லி மற்றும் எலி இறந்த நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அவற்றின் தரம் குறித்த புகார்கள் நாடு முழுவதுமே அவ்வபோது வந்துகொண்டேதான் இருக்கின்றன. கெட்டுப்போன முட்டை, உணவில் புழுக்கள் போன்றவை பெரும்பாலான புகார்களில் இடம்பெற்றவண்ணமே உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் சஹுர்காச்சி பித்யானந்தபுர் ஆரம்ப பள்ளியில் புதன்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பலரின் கவனத்தையும் பள்ளிகள் பக்கம் திருப்பியுள்ளது.

உணவில் எலி மற்றும் பல்லி கிடந்ததை அறிந்த உள்ளூர்வாசிகள் பள்ளி வளாகத்தின்முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உள்ளூர்வாசியான அஃப்சார் கூறுகையில், “இந்த பள்ளியில் மதிய உணவின் தரம் மோசமாகவே இருக்கும். இதுகுறித்து மாணவர்கள் தொடர்ந்து புகார்களை எழுப்பிவந்தனர். இப்போதுதான் கையும் களவுமாக குற்றம் பிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேற்கு வங்க மாநில அரசு ஜனவரி முதல் 4 மாதங்களுக்கு அரசுப்பள்ளிகளின் மதிய உணவில் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. பஞ்சாயத்து தேர்வை கருத்தில்கொண்டே அரசு இந்த திட்டத்தை அறிவித்திருப்பதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பிவந்த நிலையில் பள்ளி மதிய உணவில் எலி மற்றும் பல்லி கண்டறியப்பட்டது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திராவில் ஒரு அரசுப்பள்ளியில் பரிமாறப்பட்ட தரமற்ற உணவால் 25 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.