இந்தியா

கொரோனாவை குணப்படுத்த உதவும் '2 டியோக்ஸி டி குளுக்கோஸ்' - டி.ஆர்.டி.ஓ-ன் புது தயாரிப்பு

கொரோனாவை குணப்படுத்த உதவும் '2 டியோக்ஸி டி குளுக்கோஸ்' - டி.ஆர்.டி.ஓ-ன் புது தயாரிப்பு

நிவேதா ஜெகராஜா

கொரோனாவை குணப்படுத்த, '2 டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற மருந்து தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. 

கொரோனாவை தடுக்க இப்போதைக்கு நம்மிடையே இருக்கும் ஒரே ஆயுதம், தடுப்பூசிகள்தாம். அதேபோல கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை காப்பாற்றும் வழி, மருந்தும் மாத்திரைகளும்தான்.

தடுப்பூசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதை போல, மருந்து மாத்திரைகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணம், ரெம்டெசிவிர் மருந்தின் தட்டுப்பாடு. 'இம்மருந்து உயிர்க்காக்கும் மருந்தல்ல' என வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கும்போதிலும், இது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களை குணப்படுத்த ஓரளவு உதவுகிறது என்ற நோக்கத்தில் தொடர்ந்து சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக இதை வாங்க அலைமோதுகின்றனர்.

இப்படியான சூழலில், '2 டியோக்ஸி டி குளுக்கோஸ்' எனப்படும் 2 -டி.ஜி. என்ற புதிய கொரோனா மருந்து தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த மருந்து, வெற்றிகரமாக மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டு கொரோனா மருந்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஒப்புதல், பலருக்கும் நம்பிக்கையளித்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணம், உள்நாட்டு மருந்தெனும்போது, உள்நாட்டு உருமாறிய கொரோனாவுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதும், இம்மருந்து, உள்நாட்டு மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால், நாம் பிற நாடுகளை சார்ந்து செயல்பட வேண்டாம். மட்டுமன்றி, அடிப்படையாகவே உலகிலேயே இந்தியாவில்தான் மருந்து உற்பத்திக்கான திறன் அதிகமென்பதால், தட்டுப்பாடும் தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. காப்புரிமை சிக்கலும் பெருமளவில் குறையலாம்.

இந்த மருந்து பவுடர் வடிவில் இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. நீருடன் கலந்து கரைத்து குடிக்கும் வகையில் இதன் பயன்பாடு அமையும். அவசர உதவிக்காக முதற்கட்டமாக இம்மருந்து இன்று அல்லது நாளை 10 ஆயிரம் பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மூன்று வாரங்களில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்துடன் இணைந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இம்மருந்து, உயிரணுக்களில் எதிர்வினையாற்றி மேற்கொண்டு உடலில் கொரோனா வைரஸ் பெருக்கமடைவதையும், உருவாவதையும் தடுக்கிறது. இம்மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 51 சதவிகிதத்தினர் 3 நாள்களில் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் என்று தரவுகள் சொல்கிறது.

இம்மருந்து குறித்து இந்த அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி அளித்த பேட்டியில்,"கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள்கூட, இம்மருந்து எடுத்துக்கொண்டதன் மூலமாக 5 முதல் 7 நாள்களில் குணமடைந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. இந்த மருந்தின் செயல்பாடுகள், மருத்துவ ஆக்சிஜனை சார்ந்து ஒருவர் இயங்குவதை தவிர்க்க உதவுமென சொல்லப்படுகிறது. அக்காரணங்களால், இதைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை மிக மிக குறைவாக இருக்கும். இன்றைய சூழலில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அப்படியொரு சூழலிலிருக்கும் நோயாளியை குணப்படுத்த இது உதவும் என்றால், அதன் பலனாக நம்மால் பல நோயாளிகளை உயிர்ப்போகும் அபாயத்திலிருந்து காக்க முடியும்"எனக் கூறியுள்ளார்.

விரைந்து நோயாளிகள் குணமாகின்றனர் என்பதால், படுக்கை பற்றாக்குறையும் தீருமென சொல்லப்படுகிறது. இதன் விலை நிலவரம், விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தகவல் உறுதுணை: Business Today