இந்தியா

`அமைச்சர் முகத்திலயா மை வீசுவது?’ - சட்டமன்றத்துக்குள் இங்க் பேனாவுக்கு தடை போட்ட அரசு!

Rishan Vengai

மகாராஸ்டிரா சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழையும் அனைவரின் பேனாக்களும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதோடு, நீரால் ஆன பழைய இங்க் பேனாக்கள் கொண்டுசெல்ல தடை செய்யப்பட்டுள்ளன.

நாக்பூரில் மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரகாந்த் பட்டீல் இங்க் தாக்குதலுக்கு உள்ளான சில நாட்களுக்குப் பிறகு, அங்குள்ள மாநில சட்டமன்றம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எதற்காக இங்க் பேனாக்களுக்கு தடை?

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீல், வரலாற்று ஆளுமைகளை இழிவுபடுத்தும் விதமாக பேசிய சமீபத்திய பேச்சுகளுக்காக, அவர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தால் பல காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் கூட அவரது கவரேஜ்க்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சட்டமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரது பேனாக்களும் பாதுகாப்பு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, நீரால் ஆன பழைய இங்க் பேனாக்கள் உள்ளே கொண்டுசெல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன் எப்பொதுமில்லாத "அபூர்வமாக" உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இங்க் பேனாக்களோடு சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

இருப்பினும், குளிர்காலக் கூட்டத் தொடருக்காக சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள், அவர்கள் கையில் வைத்திருந்த மை-பேனாக்களை எடுத்துச்சென்றனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர, அங்கு செல்லும் மற்ற அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இங்க் பேனாவுடன் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டிய சந்திரகாந்த்- எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சியினர்

தன்மீது வீசப்பட்ட இங்க் தனது கண்களுக்குள் சென்றிருந்தால் புற்றுநோயை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அமைச்சர் பாட்டீல் குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற அமைச்சர்கள், பாட்டீல் "மன சமநிலையை இழந்துவிட்டார்" என்று புறக்கணித்தனர். மேலும் அத்தகைய மை வீசப்பட்டதால் யாரும் இறக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

டிசம்பர் 10ஆம் தேதி நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் சந்திரகாந்த் பட்டீல், கடந்த வார இறுதியில் கலந்துகொண்ட மற்றொரு விழாவில் முகத்தில் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்புக் கவசத்தோடு பங்கேற்றார்.