இந்தியா

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய ராஜீப் பானர்ஜி நாளை பாஜகவில் இணைகிறார்?

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய ராஜீப் பானர்ஜி நாளை பாஜகவில் இணைகிறார்?

JustinDurai

அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி, நாளை டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் கட்சித் தாவல்கள், அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை என அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்காள அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி கடந்த 22-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கான காரணம் பற்றி அவர் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, ராஜீப் பானர்ஜி தனது சட்டசபை உறுப்பினர் பதவியையும் நேற்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ராஜீப் பானர்ஜி நாளை (ஜனவரி 31) டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜீப் பானர்ஜியின் ராஜினாமாவை அடுத்து மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த மூன்றாவது நபரானார். முன்னதாக சுவேந்து அதிகாரியும், இந்த மாத தொடக்கத்தில் லக்‌ஷ்மி ரத்தன் சுக்லாவும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.