தனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பதிவிட்ட முன்னாள் பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்பவரை இரண்டு பேர் நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோ எடுத்தும் அவர்கள் வெளியிட்டனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்டதால் கன்னையா லாலை தாங்கள் கொலை செய்ததாகவும் அவர்கள் வீடியோவில் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் தனக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், "எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துக் கொண்டிருக்கின்றன. இன்று அதிகாலை கூட ஒரு கொலை மிரட்டல் வந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கூட சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும், கன்னையா லால் கொலை செய்யப்பட்ட வீடியோவையும் எனக்கு அனுப்புகின்றனர். எனக்கு வெளியில் நடமாட பயமாக இருக்கிறது. தற்போது எனக்கு இரண்டு போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு உள்ளனர். நான் வெளியே செல்லும் போது ஒருவர் மட்டுமே என்னுடன் வருவார். மற்றொரு காவலர் எனது வீட்டில் இருப்பார். உயிர் பயம் காரணமாக எனது குழந்தைகளை வேறு இடத்துக்கு அனுப்பி விட்டேன். நான் அடிக்கடி வெளியே செல்வதால் எனது உயிருக்கு அதிக அச்சறுத்தல் உள்ளது. எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். டெல்லி போலீஸாரிடம் இதுதொடர்பாக பல முறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை" என்றார்.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் கட்சியில் இருந்து நுபுர் சர்மாவை பாஜக இடைநீக்கம் செய்தது. நவீன் ஜிண்டால் பாஜவில் இருந்தே நீக்கப்பட்டார்.