பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை, முரளி மனோகர் ஜோஷி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார், கல்ராஜ் மிஸ்ரா, கரிய முண்டா உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட, அந்தக் கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில் பா.ஜ.கவின் நிறுவன தினத்தையொட்டி அத்வானி, ’பன்முகத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரம்தான் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். கருத்து ரீதியாக எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை எதிரிகளாக பாஜக ஒருபோதும் கருதியதில்லை.
இந்திய தேசியவாதம் என்ற எங்கள் அரசியல் கருத்துக்களில் உடன்படாதவர்களை, தேச விரோதிகளாக கருதியதில்லை’ என்று கூறியிருந்தார். இது மோடிக்கு எதிராக, அத்வானி தெரிவித்த கருத்தாகக் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி வீட்டுக்கு நேற்று வந்தார். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.