இந்தியா

பத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு

பத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு

rajakannan

பத்மாவதி திரைப்படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி அளித்துள்ளதாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி குற்றம்சாட்டியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டுமென வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். கடும் எதிர்ப்பை அடுத்து, பத்மாவதி திரைப்படம் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், பத்மாவதி திரைப்படம் எடுக்க நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நிதி அளித்துள்ளதாக ராஜ்புட் கர்னி சேனா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி கூறுகையில், “படத்திற்கு எதிராக போராடுவதற்கு கராச்சியில் இருந்து மிரட்டல் வந்தது. பத்மாவதி படத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதி அளிக்கப்பட்டுள்ளது. எங்களை ஏமாற்றுவதற்காக ரிலீஸ் தேதியை அவர்கள் தள்ளி வைத்துள்ளார்கள். இது ஒரு தந்திரம்தான். தீபிகா படுகோனேவுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது எந்த சக்தி” என்றார்.