நடிகர் தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா கொலை வழக்கு| போலீஸிடம் ஆலோசனை கேட்ட நடிகர் தர்ஷன்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புது தகவல்

கர்நாடகா ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

கன்னட திரைப்பட நடிகையும் நடிகர் தர்ஷனின் மனைவியுமான பவித்ரா கவுடாவிற்கு பெங்களூரைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், ரேணுகாசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கொலையை ஒப்புக்கொள்வதற்காக நடிகர் தர்ஷன் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக தகவல் வெளியானது. அத்துடன், ரேணுகாசாமியைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், கடத்திச் செல்லப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: சிறுமி பாலியல் வழக்கு| எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், ரேணுகாசாமியின் உடலை மறைக்க நடிகர் தர்ஷன், அவரது கூட்டாளிகள் முயன்றபோது, அதற்கு ஒரு போலீஸ் அதிகாரி உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவரிடம், ரேணுகாசாமி கொலை பற்றியும், அவரது உடலை என்ன செய்யலாம் என்பது பற்றியும் நடிகர் தர்ஷன் கேட்டதாகவும், அவர் ஆலோசனை கூறியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ரேணுகாசாமி அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது உடலில் 15 காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அரசு ஒதுக்கிய வீடு.. முஸ்லிம் என்பதால் குடியேற அனுமதிக்காத குடியிருப்புவாசிகள்.. குஜராத்தில் அவலம்!