இந்தியா

குஜராத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொலை

குஜராத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொலை

rajakannan

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவை பார்க்க சென்ற தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். 

அனந்த் மாவட்டத்தின் பத்ரனியா கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கர்பா என்னும் நடன நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதனை காண அதே கிராமத்தின் வன்கர்வாஸ் பகுதியைச் சேர்ந்த ஜயேஷ் சோளங்கி(21) என்ற தலித் இளைஞர் சென்றுள்ளார்.  அப்போது, அதே கிராமத்தில் உள்ள பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கர்பா நடனத்தை பார்க்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று ஜயேஷிடம் கூறியுள்ளனர். மேலும், ஜயேஷின் சமுதாயத்தை குறித்தும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த கைகலப்பு பின்னர் வன்முறையாக மாறியது. 

இதனையடுத்து பட்டேல் சமுதாயத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜயேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கொலை சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.