model image x page
இந்தியா

உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!

Prakash J

என்னதான் இந்தியாவில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தாலும் சாதிய ரீதியான தாக்குதல்கள் மட்டும் அவ்வப்போது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தரகாண்ட்டில் அரங்கேறி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள சுபய் கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 6 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

இவர்கள் அப்பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் டிரம்ஸ் வாசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த புஷ்கர் லால் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது கோயில் திருவிழாவுக்கு டிரம்ஸ் வாசிக்கச் சொல்லி ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் உடல்நிலையை காரணமாக சொல்லி மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கடந்த ஜூலை 14ஆம் தேதி, அந்த ஊரின் பஞ்சாயத்து சார்பில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் மொத்தமாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?

பஞ்சாயத்து உத்தரவின்படி பட்டியலின குடும்பங்கள் வனம் மற்றும் நீர்வளங்களைப் பயன்படுத்தவும், கடைகளில் பொருள் வாங்குவதற்கும், பொது வாகனங்களைப் பயன்படுத்தவும், கோயில்களில் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர், பட்டியலின மக்களை ஒதுக்கிவைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு, உத்தரவை மீறும் கிராம மக்கள் அதற்கான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று பேசியிருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த ராமகிருஷ்ண காந்த்வால் மற்றும் யாஷ்வீர் சிங் ஆகியோர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பட்டியலின சமூகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் ஓய்வு ஏன்| மனைவி, மகனுடன் செர்பியா புறப்பட்ட ஹர்திக்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?