இந்தியா

எழுத்துப்பிழை செய்ததற்காக பட்டியலின மாணவனை அடித்தேக்கொன்ற ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்

எழுத்துப்பிழை செய்ததற்காக பட்டியலின மாணவனை அடித்தேக்கொன்ற ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்

JananiGovindhan

இந்தியாவில் சிறுபான்மையினர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அவ்வப்போது கொடூரங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் தொடரும் பல விதமான தீண்டாமை கொடுமைகள் குறித்து கேள்வியுறும்போது நாட்டு மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள்.

இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் சரியாக பதில் எழுதாததால் அந்த சிறுவனை அஸ்வினி சிங் என்ற ஆசிரியர் குச்சியால் தாக்கியிருக்கிறார்.

ஏற்கெனவே உடல்நலனில் பிரச்னை இருந்த அந்த சிறுவனை ஆசிரியர் அஸ்வினி சிங் குச்சியால் அடிக்கவும், குத்தவும் செய்திருக்கிறார். இதனால் கடுமையான உடல்நலக் கோளாறுக்கு அந்த சிறுவன் ஆளாகியிருக்கிறார்

செப்டம்பர் 7ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் உள்ள அச்சால்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியிருக்கிறது. இதனையடுத்து உடல்நலிவுற்ற சிறுவனை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

முதல் மருத்துவ செலவுக்காக இரண்டு தவணையாக 40 ஆயிரம் ரூபாயை ஆசிரியர் அஸ்வினி சிங் கொடுத்திருக்கிறார். இருப்பினும் சிறுவனின் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.

இதற்காக ஆசிரியர் அஸ்வினி சிங்கை சிறுவனின் பெற்றோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோதும், வீட்டுக்கே சென்ற போதும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் அச்சால்டா காவல் நிலையில் ஆசிரியரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று (செப்.,26) சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது. ஆகவே, ஆசிரியர் அஸ்வினி சிங் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 308 (காயம் ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்வது), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்தோடு அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள உயிரிழந்த சிறுவனின் தந்தை ராஜு, “செப்டம்பர் 7ம் தேதியன்று சமூக அறிவியல் டீச்சரான அஸ்வினி சிங் வகுப்பில் டெஸ்ட் வைத்திருக்கிறார். என் மகன் நன்றாக படிக்கக் கூடியவன். டெஸ்ட்டில் சிறிதாக எழுத்துப்பிழை செய்திருக்கிறான். அதற்காக என் மகனின் தலை முடியை இழுத்து அவனை குச்சியால் அடித்து, குத்தியிருக்கிறார். இதனால் வகுப்பிலேயே மயங்கி விழுந்திருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.

உயிரிழந்த பட்டியலினச் சிறுவனின் உடல் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சால்டா காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.