டெல்லியில் தினசரி பாதிப்பு 1,500-ஐ தாண்டிய நிலையில், வேகமாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தலைநகருக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். ஏறத்தாழ 'லாக்டவுன்' மோடு நோக்கி நகர்கிறது டெல்லி.
குளிர்காலத்திற்கு பிரியாவிடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்க தயாராக உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் என்பது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினமும் 100 முதல் 200 வரை கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், மூன்று மாதங்களில் இல்லாத அளவாக தற்பொழுது தலைநகரில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற எண்ணிக்கையை தாண்டி உள்ளது.
இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளார் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேநேரத்தில் தினசரி பரிசோதனையை 80,000 என்ற இலக்கை எட்டு வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகம் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் டெல்லிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், டெல்லியின் எல்லைகள் ஆகியவற்றில் பரிசோதனைகள் என்பது அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இருக்கக்கூடிய இந்தியா கேட், செங்கோட்டை ஆகியவற்றை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்பது தற்பொழுது வழங்கப்படவில்லை.
மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் எனவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக தனியார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், காலி மைதானங்கள் ஆகியவற்றை மீண்டும் சிகிச்சை மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாயமாக 2000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், இரவு நேர கேளிக்கை அரங்குகள், தியேட்டர்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்துகொள்ள அனுமதியை வழங்கி இருக்கிறது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம் என்கிறது மாநில அரசு.
இதுகுறித்து புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் இயக்குனர் செல்லையா, புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், "நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா பரவல் என்பது தலைதூக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே மாநில அரசு சார்பிலும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் சார்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களை பொருத்தமட்டில் பொதுமக்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் அவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஓரளவு பொது மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து நாங்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
டெல்லியை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, சிகிச்சை பெற படுக்கை வசதி கிடைக்காமல் ஏராளமான நபர்கள் தங்களுடைய வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். குறிப்பாக, கர்ப்பிணி ஒருவர் படுக்கை வசதி கிடைக்காமல் தன்னுடைய குழந்தையுடன் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாநில அரசு பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- விக்னேஷ் முத்து