இந்தியா

எங்கள் கிராமத்து பலாப்பழத்தை கேட்டார்; வாங்கி வந்தேன் - பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்

எங்கள் கிராமத்து பலாப்பழத்தை கேட்டார்; வாங்கி வந்தேன் - பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்

webteam

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கிராமத்திலுள்ள பலாப்பழத்தை சுவைக்க விரும்பியதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார்.

கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டு, இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்த பல தகவல்கள் தகவல்கள் கடந்த ஒரு வாரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மகன் அபிஜித், தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவரது உடல் நிலை தேறி வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அதில் அவர் கூறும் போது “ தந்தைக்காக கொல்கத்தாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள எங்களது கிராமமான மிராட்டிக்குச் சென்று பலாப்பழங்களை வாங்கச் சென்றேன். கிட்டத்தட்ட 25 கிலோவிற்கு பலாப்பழங்களை வாங்கினேன். அதனை கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி ரயில் மூலமாக கொண்டு வந்து அப்பாவைச் சந்தித்தேன். அப்பா அதனை மிகவும் விரும்பி உண்டார். நல்ல வேளை அதனால் அவரின் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வில்லை.

ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதித்த போது, அவருக்கு மூளையில் இரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் முன்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவர் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். என்னால் அவரை நான்கு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. கடைசியாக சந்தித்த போது, அவரது மூச்சு விடும் திறன் நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார்.