அரபிக்கடலில் உருவாகியுள்ள 'மஹா' புயல் வடமேற்கு திசையில் பயணித்து மேலும் வலுப்பெற்று, தீவிர மற்றும் அதிதீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடலில் ஏற்கெனவே க்யார் என்ற புயல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், கேரளாவை ஒட்டிய கடல்பகுதியில், அதாவது திருவனந்தபுரத்திலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகும் 'மஹா' புயல், படிப்படியாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று, அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும்.
இன்று தீவிர புயலாக அடுத்தகட்டத்துக்கு வேகம் கொள்ளும் மஹா புயல், நாளை அதிதீவிர புயலாக உருவெடுக்கும். அதிதீவிர புயல் என்ற நிலை, வரும் 4 ஆம் தேதி வரை நீடிக்கும். அப்போது அதிகபட்சமாக 190 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் தீவிரமாகக் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவுகளைக் கடந்து செல்லும் மஹா புயல், ஓமன் நாட்டைக் கடக்கும். புயலுக்கு சூட்டப்பட்டிருக்கும் 'மஹா' என்ற பெயர், ஓமன் நாடு அளித்த பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.