இந்தியா

ஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு?: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்!

ஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு?: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்!

webteam

ஃபோனி புயல் சுமார் ரூ.525 கோடி மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்தியுள்ள ஒடிசா அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. மணிக்கு சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபோனி, பலத்த சேதங்களை விளைவித்து ஆறாத ரணச்சுவடுகளை பதித்துவிட்டு சென்றது. புயலால் பத்தாயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஃபோனி புயலால், ஒடிசாவில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மேலும் முடுக்கவிட்டு உள்ளது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஃபோனி புயலால் ஒடிசாவில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஃபோனி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒடிசா அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில்  மே 3ம் தேதி தாக்கிய ஃபோனி புயல் சுமார் ரூ.525 கோடி மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்தியுள்ளது. சுமார் 291 கிமீ தூரத்துக்கான வாய்க்கால்கள், 750 கிமீ தூரத்துக்கான சாலைகள்,  267 மதகுகளை ஃபோனி புயல் சிதைத்து வீசியுள்ளது. 

அதுபோக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பொது இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. 20 நகரங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் இருக்கிறது. தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது