ஃபோனி புயல் நெருங்கியதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் தற்போது ஒடிசாவை நோக்கி மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மதியம் 3 மணியளவில் ஒடிசாவிலுள்ள புனித நகரமான பூரி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பகுதி மாவட்ட எஸ்.பி பினாக் மிஸ்ரா அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனே வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கொல்கத்தா விமான நிலையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 9.30 முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை விமான சேவை கிடையாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விமானசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.