இந்தியா

கோர தாண்ட‌வம் ஆடிய ஃபோனி புயல் - 3 பேர் உயிரிழப்பு

கோர தாண்ட‌வம் ஆடிய ஃபோனி புயல் - 3 பேர் உயிரிழப்பு

rajakannan

அதிதீவிர புயலான ஃபோ‌னி, ‌‌ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 245 ‌கிலோ மீட்டர் வேகத்தில் பய‌ங்கர காற்று வீசியதாக ஐதராபாத் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பூரி பகுதியில் புயல் காலை 8 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கி‌யதாகவு‌ம் பிறகு 11 மணியளவில் முழுமையாக‌ கரையைக் கடந்து வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை மையம் கூ‌றியுள்ளது. 

புயல் கரையைக் கடந்த நேரத்தில் புவனேஸ்வர், புன் ஜம் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் ‌பயங்கர‌ காற்றுடன் மழையும் பெய்‌தது. புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ள பூரி நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் ‌பல இட‌ங்களில் குடிசை வீடுகள் முற்றிலும் சிதைந்தன.‌ வீடுகளின் கூரைகள் ப‌றந்தன‌.‌ ஏராளமான மரங்கள் சாலையெங்கும் விழுந்து கிடக்கின்ற‌‌‌ன என்று‌ம் மின் கோபுரங்க‌ளும் செல்போன் கோபுரங்களும் பல இடங்களில் சாய்ந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

பல இட‌ங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவையும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்‌ளது. புயல் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உணவு உ‌ள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. புயலின் வேகம் பெரிதும் குறைந்து விட்ட நிலையில் மீட்புப் பணி‌கள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு‌வருகின்றன‌. புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். 

இதற்கிடையில் புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு அனைத்து‌ விதங்களிலும் துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஃபோனி புயல் தாக்குதல் பாதிப்புள்ள மாநி‌லங்களுக்கு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதையும் பி‌ரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.