இந்தியா

சைக்கிள் சின்னம் முடங்கும்?

webteam

சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் ஆகியோர் தலைமையிலான இரண்டு கோஷ்டியினரும் உரிமை கோருவதால், சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் அறிவிக்க உள்ள நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. சமாஜ்வாதி கட்சியை விட்டு தனது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் நீக்கினார். அதன்பிறகு அகிலேஷ்யாதவ் கூட்டிய எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் நியமிக்கப்படுவதாகவும், முலாயம் சிங் கவுரவ தலைவராக இருப்பார் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அகிலேஷ் தரப்பினர் நடத்திய கூட்டம் செல்லாது என்று கூறிய முலாயம் சிங் கூறினார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் தங்களுக்கே உரியது என்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.

தங்களுக்கே அதிக ஆதரவு இருப்பதால் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோர அகிலேஷ் தரப்பினர் தேர்தல் ஆணையரை சந்திக்கவுள்ளனர். இதையடுத்து, இருதரப்பினரும் சின்னத்துக்கு போட்டியிடுவதால், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைக்கக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.