பிரேன் சிங், மணிப்பூர் கலவரம் ptweb
இந்தியா

’ஏன் முன்பே வரவில்லை?’ - ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை விமர்சித்த இரு மாநில முதல்வர்கள்!

PT WEB

குக்கி பழங்குடி மக்களும், மெய்தி மக்களும் பல நுற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்ததைதான் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் கடந்த மே 3 ஆம் தேதி மெய்தி சமூக மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி சமூகத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது. இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தற்போது வரை 120க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். பல கிறிஸ்தவ தேவாலயங்கள், பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரை ஆளும் பாஜக அரசில் எம்.எல்.ஏ.க்களாக மெய்தி சமூகத்தினரே பெரும்பான்மையாக இருப்பதால் பாஜக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது என எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் கடந்த 24 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் வைத்தே உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இத்தனை ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்குப் பின்னும் மணிப்பூரில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

Manipur violence - rahul gandhi

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் சென்றார். அங்கு சுராசந்த்பூர் நிவாரண முகாமிற்கு சென்றார். முதலில் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின் மாநில தலைநகர் இம்பால் சென்று அங்கு அரசு ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டரில் சுராசந்த்பூர் சென்றார். அங்கு அம்மக்களை சந்தித்தார். அவரிடம் குழந்தைகள் பெண்கள் ஆகியோர் கண்ணீருடன் தங்களது நிலையை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல்காந்தி சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஓரிரு தினங்கள் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் வியாழன் (29/6/23) அன்று காங்போக்பி மாவட்டத்தில் ஹராவதேல் கிராமத்தில் ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத கலவரக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

மணிப்பூர் கலவரம், முதலமைச்சர் ராஜினாமா கடிதம்

இந்நிலையில், அனைத்திற்கும் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகப் போவதாக நேற்று தகவல் வெளியானது. இதற்காக மணிப்பூர் ஆளுநரை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் முதலமைச்சரின் இல்லத்திற்கு வெளியே பெரும் அளவில் அவரது ஆதரவாளர்கள் கூடி பிரேன் சிங்கிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவரது முடிவை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

biren singh

இதையடுத்து, அவர் தன்னுடைய ராஜினாமா முடிவை கைவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரத்தில் அவரிடம் ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நாம் யாரையும் தடுக்க முடியாது. ஆனால் அதற்கென நேரம் இருக்கிறது. 40 நாட்களாகின்றன. அவர், ஏன் முன்பே வரவில்லை? காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அவர், எந்த நோக்கத்துக்காக மணிப்பூருக்கு வந்தார் எனத் தெரியவில்லை. ஆனால், தற்போது நேரம் சரியில்ல என்று நினைக்கிறேன். அவர் ஓர் அரசியல் நிகழ்வுக்காக வந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ராகுல் காந்தி

அவர் வந்தபோதுகூட இங்கு வன்முறை நடைபெற்றது. பிஜேபி அலுவலகம் தாக்கப்பட்டது. அவர் வந்தது மாநிலத்தின் நன்மைக்காகவா அல்லது அரசியல் லாபத்துக்காகவா? என்றாலும் அவரின் மணிப்பூர் பயணத்தை நான் ஆதரிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ”மணிப்பூரில் ஓரளவு அமைதி திரும்பிவிட்டது. இப்போது காங்கிரஸ் மணிப்பூரைப் பற்றிக் கதறி அழுகிறது. அவர்கள் மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவியபோது அழுதிருக்க வேண்டும். அப்போது மணிப்பூருக்குச் செல்லவில்லை, அதைப் பற்றி கருத்துச் சொல்லவில்லை.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

இப்போது மணிப்பூர் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. மணிப்பூர், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேற்றம் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் கூற முடியும். நிலைமை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.