பறவைக் காய்ச்சல்  Facebook
இந்தியா

ஜார்க்கண்ட்- தமிழ்நாடு - கேரளாவில் பறவைக் காய்ச்சல் நிலவரம் என்ன?

அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கேரளா மட்டும் அல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சலின் நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு

ஜெனிட்டா ரோஸ்லின்

அதிகரிக்கும் கோடைகால நோய்களுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலின் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அண்மையில் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் பரவல் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கிடையேயான எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கேரளா

கேரளாவை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சலில் பாதிப்புகள் பறவைகளுக்கு இருப்பது தென்பட்டது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் டெத்வா மற்றும் செருதானா கிராமங்களில் சில கோழிப்பண்ணைகளில் வாத்துகள் அடிக்கடி இறந்த நிலையில் இருந்துள்ளன. இந்நிலையில், அதனை ஆய்வு செய்ததில் ஹச்5என்1என்ற பறவைக் காய்ச்சல் நச்சுயிரி பாதித்து இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் 

இந்நிலையில், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பறவைக் காய்ச்சலின் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே அமைந்துள்ள கோழிப்பண்னையில் இருந்த கோழிக்கு பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸான ஹச்5என்1 இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் , கோழி பண்ணை பணியாளர்கள் 6 பேர் ராஞ்சியில் அமைந்துள்ள சதார் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து ராஞ்சியின் துணை கமிஷனர் ராகுல் குமார் சின்ஹா தெரிவிக்கையில், “ "ராஞ்சியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன், கால்நடை பராமரிப்பு அமைச்சகம் கூறியுள்ள வழிகாட்டுதல்களின்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் நடவடிக்கையாக பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து பறவைகளின் விற்பனை மற்றும் கொள்முதலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜார்க்கண்டில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,745 கோழிகள், 450 வாத்துகள் மற்றும் 1,697 முட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

இந்நிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பறவைக் காய்ச்சல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கையானது, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ”பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி. எனவே கால்நடை துறையுடன் இணைந்து பறவைக் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும் அதன் மூலம் மனிதர்களுக்கு காய்ச்சல் பரவினால், அதுகுறித்த தகவல் பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும்,தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். பாதித்தவர்களிடமிருந்து பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும். ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டும் அல்ல, உலக அளவில் பயம் காட்டிவரும் இந்த பறவைக் காய்ச்சல் அண்மையில் அமெரிக்கவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றைபோல பறவைக் காய்ச்சலும் மாற வாய்ப்பு உள்ளது எனவும், ஆகவே பச்சை பாலை குடிக்கமால் காய்ச்சிய பாலை பருக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.