இந்தியா

`தோனி இப்போ நினைச்சாகூட....’ சிஎஸ்கே கேப்டன்ஷிப் பற்றி மனம்திறந்து பேசிய CSK அணியின் சிஇஓ!

`தோனி இப்போ நினைச்சாகூட....’ சிஎஸ்கே கேப்டன்ஷிப் பற்றி மனம்திறந்து பேசிய CSK அணியின் சிஇஓ!

webteam

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, தோனிக்கு பதிலாக ஸ்டோக்ஸ் சிஎஸ்கே கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று விவாதங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் இதுபற்றிய தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக கேப்டன்ஷிப் பிரச்னையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் கடைசி நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று நடந்த ஏலத்திலிருந்தே எல்லோரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. ‘சுட்டிக் குழந்தை' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாம் கரணை சிஎஸ்கே வாங்கிவிடும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சாம் கரணின் ஏல தொகை ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிகபட்சமென ரூ.19.50 கோடிக்கு சென்றது. இது CSK அவரை கைவிட ஒரு காரணமாகவும் இருந்தது.

சாம் கரனை மட்டுமன்றி, மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டரையும் வாங்கத் தவறியது சிஎஸ்கே. இதன் பிறகு, சிஎஸ்கே ஸ்டோக்ஸை செய்வதற்காக, தீவிரமாக ஏலத்தில் இறங்கியது. மற்ற நான்கு உரிமையாளர்களோடும் மோதி சிஎஸ்கே மிகத்தீவிரமாக போட்டியிட்டது. அதன்பின்னரே இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸ்டோக்ஸ், சிஎஸ்கே-வுக்கு கிடைத்தார். இவர் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் மூன்றாவது அதிக விலை கொண்ட வீரராவார்.

அந்தவகையில் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது சிஎஸ்கே. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், சிஎஸ்கே-வுக்கு தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர்தான் தோனிக்கு பதிலாக கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவாரோ என்று நிபுணர்கள் மற்றும் ரசிகர்களும் பேசத்தொடங்கினர். இதுபற்றி பலரும் பேசிவந்த நிலையில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் இதுபற்றி தற்போது பேசியுள்ளார். இந்த ஐபிஎல்லில் இரண்டாவது முறையாக ஸ்டோக்ஸுடன் மீண்டும் இணைவது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

அவர் அளித்திருக்கும் தகவல்களின்படி, "ஸ்டோக்ஸைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மிகவும் போராடி, இறுதியில்தான் சிஎஸ்கேவுக்கு ஸ்டோக்ஸ் கிடைத்தார். அவரை பெற்றதில், நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம். சிஎஸ்கே அணிக்கு, ஒரு ஆல்ரவுண்டர் தேவை. அந்தவகையில் எங்களுக்கு ஸ்டோக்ஸ் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் மட்டுமல்ல, தோனியும் இதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போதும் யாருக்கு கேப்டன்ஷிப் என்பது ஆப்ஷனில்தான் இருக்கிறது. கேப்டன்சியை தோனி தேர்தெடுப்பதா வேண்டாமா என தோனிதான் முடிவெடுக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் எடுக்கும் முடிவுகளை சுற்றியே அணியின் நகர்வுகள் அமையும்.

கைல் ஜேமிசன் காயமடைந்ததாக தெரிகிறது. மற்றபடி ஃப்ளெமிங்கிடம் இருந்து அவர் குணமடைந்திருப்பதாகவும் விளையாட தயாராக இருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், CSK-வின் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே நன்றாக விளையாடும் என்று நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்பு தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி, ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஜடேஜாவால் அதை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தோனியே மீண்டும் கேப்டன் பொறுப்பையும் ஏற்க வேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அருணா ஆறுச்சாமி