இந்தியா

"கிரிப்டோ கரன்சியும் ஒரு சூதாட்டமே"-ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை.. ஏன் அப்படி சொன்னார்?

"கிரிப்டோ கரன்சியும் ஒரு சூதாட்டமே"-ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை.. ஏன் அப்படி சொன்னார்?

webteam

“கிரிப்டோ கரன்சியும் ஒரு சூதாட்டமே” என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற ‘பிசினஸ் டுடே’ விழாவில் நேற்று (ஜனவரி 13) பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “ஒவ்வொரு சொத்துக்கும், பணத்திற்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோவை பொறுத்தவரை அதற்கு ஒரு மதிப்பும் இல்லை. உண்மையில், ஒரு துலிப் மலர் அளவுக்கு இருக்கும் மதிப்புகூட கிரிப்டோவுக்கு இல்லை. கிரிப்டோ கரன்சியின் விலை அதிகரிப்பது என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

எந்த அடிப்படையும் இல்லாமல், ஒன்றின் விலை முழுமையாக நம்பிக்கை அடிப்படையில் ஏறுவதும் இறங்குவதும் சூதாட்டம்தான். கிரிப்டோ கரன்சிகளின் சந்தை விலை நிலையற்றது. கிரிப்டோ கரன்சி சந்தையில் யாருடைய மதிப்பீட்டை முழுவதுமாக நம்புவது என்பது 100 சதவீத ஊகங்களைத் தவிர வேறில்லை. வெளிப்படையாகச் சொன்னால், அது சூதாட்டம் போன்றது.

சூதாட்டத்தை தடை செய்யும் நம் நாட்டில் சூதாட்டத்தை போன்ற கிரிப்டோ கரன்சியையும் சூதாட்டமாகக் கருதி தடை செய்ய வேண்டும். இல்லையேல், அதற்கென்று தனி விதிகளைக் கொண்டு வர வேண்டும். நாட்டில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். கிரிப்டோ கரன்சி தலைதூக்கினால், பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை அது இழக்கும். அது மட்டுமில்லாமல் பொருளாதாரத்தின் டாலர் மயமாக்கலுக்கும் வழிவகுக்கும்” எனச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர், “இது வெற்று எச்சரிக்கை அல்ல. ஓராண்டுக்கு முன்பு இருந்தே இந்த முழு விஷயமும் விரைவில் சரிந்துவிடும் என்று தொடர்ந்து கூறி வந்தோம். கிரிப்டோவுக்கும் டிஜிட்டல் முறைக்கு நாம் மாறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நமக்குப் பாதிப்புகள் இல்லை. ஆனால், பெரிய டெக் நிறுவனங்கள் உள்ளே வரும்போது டேட்டா பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

கிரிப்டோ கரன்சி என்பது என்ன?

ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமே, கிரிப்டோ கரன்சி என்பதாகும். இது, நாணயமாகவோ அல்லது தாள் வடிவிலோ (பணம்) இருக்காது. முழுவதும் இணையத்தில் இருக்கும் இந்த கிரிப்டோ கரன்சிகள், எந்த சட்டவிதிகளும் இல்லாமல் வர்த்தகம் செய்யப்படும். உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பலரும் இதுபோன்ற கரன்சிகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றனர். இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பயன்பாடு உள்ள நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்