இந்தியா

30% சரிந்தது கச்சா எண்ணெய் விலை : 29 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி ஏன்..?

webteam

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் குறைந்திருப்பது மந்தநிலையில் உள்ள இந்தியாவின் பொரு‌ளாதாரத்தை மீட்க ஏதுவாக மாறியுள்ளது.

கொரோனா‌ வைரஸ் தொற்று சர்வதேச சமூகத்தை அச்சுறுத்தும் நிலையில், தேவை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் அளவிற்கு குறைக்குமாறு எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் வலியுறுத்தியது. கச்சா எண்ணெய்யை அதிகளவு உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடான ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனை அடுத்து ஏப்ரல் மாதம் முதல் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நாளொன்றுக்கு 9.7 மில்லியன் பீப்பாய் அளவிற்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வரும் சவுதி அரேபியா, ஏப்ரல் மாதம் முதல் 10 மில்லியன் பேரலாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையை‌ விடுவித்து வெளிநாடுகள் சவுதி நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சலுகை விலையில் வழங்கப்படும் ‌எனவும் அந்நாடு அறிவித்துள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா சர்வதேச சந்தையில் விலைப்போரை உருவாக்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை மற்றும் பயன்பாடும் அதிகளவில் குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மளமளவென சரிந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 59.31 டாலராக விற்பனையானது. கொரோனா பாதிப்‌பால் சீனாவில் கச்சா எண்ணெய் நுகர்வு கணிசமாகக் குறைந்ததையடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை குறையத் தொடங்‌கியது.‌ பிப்ரவரி 28 ஆம் தேதி ஒரு பீப்பாய் 50.52 டாலராக குறைந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 3-ஆம் தேதி 51.86 டாலராக சற்று ஏற்றம் கண்டது. எண்னெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் கூட்டத்தைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியது. மார்ச் 6ஆம் தேதி ஒரு பீப்பாய் 45.‌7 டாலராகவும், மார்ச் 8ஆம் தேதி ஒரு பீப்பாய் 35.73 டாலராகவும் சரிந்தது. இந்நிலையில், இன்று காலை சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 32.27 டாலராக சரிவு கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது அதனை அதிகம் இறக்‌குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளின் இறக்குமதி செலவினத்தை குறைக்க ஏதுவாக அமைந்துள்ளது. குறிப்பாக, பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் குறைந்தால் இந்தியாவின் இறக்குமதி செலவில் ஓராண்டில் 10,700 கோடி ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமார் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 20 நாட்களில் சுமார் 27 டாலர் அளவிற்கு வீழ்ச்சி கண்டிருப்பது இந்தியாவின் இறக்குமதி செலவினத்தை வெகுவாக குறைக்கும். இதனால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.